கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா மிருககாட்சி சாலையில் கடந்த 22 ஆண்டுகளாக சாவித்ரம்மா என்ற பெண், சிறுத்தை குட்டிகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.
இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட சிறுத்தைக் குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ”நானும் எனது கணவரும் மிருகக்காட்சி சாலையில் பாதுகாவலராக பணியாற்றி வந்தோம். 2000-ம் ஆண்டில் எனது கணவர் இறந்துவிட்டார்.
2 குழந்தைகளுடன் நான் தவித்து வந்தேன். அப்போதுதான் மிருகக்காட்சி சாலையில் சிறுத்தைக் குட்டிகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குட்டிகள் சில நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருக்கும் .
அவற்றை அரவணைத்து பால் கொடுப்பேன். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை குட்டிகளுக்கு பால் கொடுக்க வேண்டும். குட்டிகள் சிறியதாக இருக்கும் போது பாதுகாப்பாகக் கவனிக்க வேண்டும்.
நான் வெளியூர் செல்லும் நாட்களில் இக் குட்டிகள் சரியாக பால் குடிப்பதில்லை. அப்போது தொலைபேசியில் என்னைப் பேச சொல்வார்கள். என்னுடைய சத்தத்தை கேட்ட பின்னர் குட்டிகள் பால் குடிக்கும்.
குட்டிகள் வளர்ந்த பின்னர் கூண்டில் அடைத்து சரணாலயம் மற்றும் காடுகளுக்கு கொண்டு செல்வார்கள். அப்போது குழந்தைகளை பிரிவது போன்ற ஏக்கம் எனக்குள் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.