செந்தில் பாலாஜியை ஆளுநர் ஆர்என் ரவி நேற்றுமாலை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்த நிலையில் நள்ளிரவே குறித்த உத்தரவை அவர் மீளப்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவமானது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமுலாக்கத் துறையினர், கடந்த, 14ஆம் திகதி, அமைச்சர் செந்தில் பாலாஜியை மோசடி வழக்கில் கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம் செந்தில் பாலாஜி அமைச்சர் அந்தஸ்து இல்லாத அமைச்சராகத் தொடர ஒப்புதல் அளிக்கக் கோரி, ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.
எனினும் செந்தில் பாலாஜியைப்பதவி நீக்கம் செய்து, ஆளுநர் ரவி நேற்றைய தினம் உத்தரவிட்டார். இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் ‘அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் மோசடி உட்பட பல்வேறு குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகிறார். தன் அமைச்சர் பதவியை, அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவர் தன் செல்வாக்கை பயன்படுத்தி, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தற்போது அவர், அமுலாக்கத் துறை விசாரிக்கும் குற்ற வழக்குகளுக்காக, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மேலும் சில குற்ற வழக்குகள், மாநிலப் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில், அவர் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பது, சட்டப் படியான விசாரணையை பாதிக்கும். இறுதியில் அரசியலமைப்புகள் சீரழியும் நிலை ஏற்படும். இந்நிலையிலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குறித்த உத்தரவுக்கு முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு கட்சிதலைவர்களும் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த உத்தரவை ஆளுநர் ரவி நேற்று நள்ளிரவு மீளப்பெற்றுள்ளதோடு அடுத்த அறிவிப்பு வரும் வரை செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.