உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரும் மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகருமான பில் கேட்ஸ் , ‘கேட்ஸ் வென்ச்சர்ஸ்‘ என்ற தொண்டு நிறுவனமொன்றை நடத்தி வருகின்றார்.
அந்தவகையில் குறித்த நிறுவனத்திற்கு ஆட்களை இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சையானது அண்மையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நேர்முகப் பரீட்சையில் பெண் விண்ணப்பதாரர்களிடம் அந்தரங்கமான பாலியல் கேள்விகள் கேட்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்ட பெண்களிடம் அவர்களின் கடந்த கால பாலியல் அனுபவங்கள் பற்றிய விவரங்கள், அவர்களின் தொலைபேசிகளில் உள்ள அவர்களுக்கு நெருக்கமானவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவர்களுக்கு ஆபாச படங்களில் உள்ள ஈடுபாடு போன்ற மிகவும் பொருத்தமற்ற கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
மேலும் சிலரிடம் கவர்ச்சியான நடனத்தில் ஈடுபடுவது குறித்தும், அவர்களின் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சில பெண் விண்ணப்பதாரர்களிடம், பணத்திற்காக ஆபாசமாக நடனம் ஆடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்களா எனவும் கேள்வி எழுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த நேர்காணல் தொடர்பான நடைமுறையானது, “கான்சென்ட்ரிக் அட்வைசர்ஸ்” எனப்படும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து எந்த விவரமும் தங்களுக்கு தெரியாது எனவும், தங்களின் பணியமர்த்தல் செயல்முறையில் ஒவ்வொரு விண்ணப்பதாரரையும் மதிக்கின்றோம் என்றும் கேட்ஸ் வென்ச்சர்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது. இதற்கு முன், 2019ஆண்டு ஒரு ஊழியருடனான பாலியல் உறவு குற்றச்சாட்டின் காரணமாக் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து பில்கேட்ஸ் இராஜினாமா செய்ய நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.