ஆடுகளைப் பலியெடுத்த ‘வந்தே பாரத்‘ புகையிரதத்தின் மீது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கிப் பயணித்த வந்தே பாரத் புகையிரதத்தின் மீது சொஹாவால் பகுதியில் வைத்து சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் புகையிரதத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. எனினும் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் தொடர்பாக பொலிஸார் நன்னு பஸ்வான், அவரது மகன்கள் அஜய் மற்றும் விஜய் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், நன்னு பஸ்வானுக்குச் சொந்தமான 6 ஆடுகள் மீது கடந்த 9ஆம் திகதி வந்தே பாரத் மோதியுள்ளதாகவும், இதில் அவை அனைத்தும் இறந்துள்ளதாகவும் இதனால் ஆத்திரமடைந்தே குறித்த புகையிரதத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோராக்பூர்-லக்னோ இடையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் ‘வந்தே பாரத்தை கடந்த 7ஆம் திகதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.