அஸ்வெசும திட்டம் தொடர்பாக மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிக்கும் கால எல்லை, ஒகஸ்ட் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அஸ்வெசும பலன்களைப் பெறுவதற்கான மேன்முறையீட்டுக் கால அவகாசம் கடந்த 10 ஆம் திகதி நிறைவடைந்ததாகவும், தகுதியுடையவர்களுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதினால் மேலும் அது நீடிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இம்முறை விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு அல்லது மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் மீண்டும் அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.
குறிப்பாக சமுர்த்தி வேலைத்திட்டத்தில் சமூக வலுவூட்டல் முறைமை இல்லை என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக சமூக வலுவூட்டல் முறைமையை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் சமூக நலன்புரி நன்மைகள் சபை ‘அஸ்வெசும’ வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று சில அரசியல்வாதிகள் சமுர்த்தி வங்கி தொடர்பாக தவறான கருத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
ஆனால் அஸ்வெசும வேலைத்திட்டத்தின் ஊடாக சமுர்த்தி வேலைத்திட்டம் மற்றும் சமுர்த்தி வங்கி கட்டமைப்பு என்பன மிகவும் செயற்திறனுடன் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, அஸ்வெசும செயல்முறையை சரியாக மேற்கொள்ள முறையான பொறிமுறை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் பாடசாலை செல்லும் வயது முதல் முதியோர்வரை பாதுகாக்க இந்த திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.