தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்ற காரணத்தினால்தான், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவினர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தனர்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பாளராக களமிறங்கிய, அரச ஊழியர்களின் சம்பளம் இல்லாது போயுள்ளது.
அரசாங்கத்தின் தவறினால்தான் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரச ஊழியர்களின் விடுமுறையும் ரத்தாகியுள்ளது.
சிலருக்கு விடுமுறை எடுத்த காரணத்தினால், அவர்களின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.
நிதியில்லாத காரணத்தினால்தான் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தவில்லை என்று அரசாங்கம் கூறுகிறது.
மறுபுறம், நாட்டில் போதியளவு நிதி உள்ளதாகவும் பொருளாதாரம் வலுவடைந்து வருவதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.
இதிலிருந்தே, தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்ற காரணத்தினால்தான், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளது என்பது தெளிவாகிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.