ஒரு பக்கத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவேன் என கூறி சர்வதேசத்தினுடைய ஆதரவினை பெறவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவேன் என கூறி சர்வதேசத்தினுடைய ஆதரவினை பெறவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
அதே போன்று உள்நாட்டுக்கு உள்ளே பிரச்சனைகளை தீர்க்காமல் இருப்பதற்கு தங்களுக்கும் மொட்டு கட்சியினருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு விட்டதாக காட்டுவதற்கான முயற்சியினையும் மேற்கொண்டு இருக்கின்றனர்.
அதேபோல சரத் வீரசேகர, நாமல் ராஜபக்ச போன்ற இனவாதத்தை மீண்டும் இந்த நாட்டுக்குள்ளே கொண்டு வந்து தங்களுடைய அரசியல் லாபத்தை தேடுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
இவர்களை அனைவரையும் வைத்துக்கொண்டு இயக்கி தமிழ் மக்களின் தீர்வு தேவை இல்லை என்று சொல்ல முயற்சி எடுக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடமும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மொட்டுக்கட்சி தன்னுடைய கட்சியினுடைய மாவட்ட கிளைகள் பிரதேச கிளைகள் தொகுதிகளை போன்ற விடயங்களிலே புனரமைப்புகள் செய்து கூட்டங்களை நடத்திக் கொண்டு வருகின்றார்கள்.
இந்தக் கூட்டங்கள் அனைத்தையும் பார்த்தால் நேரடியாக அரசாங்கத்தை தாக்கும் கருத்துக்களை தான் அவர்கள் முன்வைக்கின்றார்கள்.
இதிலே வேடிக்கையான விடயம் என்னவென்றால் அரசாங்கத்தின் பங்குதாரர்களாக இருந்து கொண்டு நாடாளுமன்றத்திலே அரசாங்கத்திற்கு புதிய சட்டமூலத்தை அமுல் படுத்துவதற்கு தேவை வரும்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதனை ஆதாரித்திருக்கின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.