மட்டக்களப்பு, தாந்தாமலை அருள்மிகு முருகன் ஆலயத்தில் வருடாந்த மஹோட்சவத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இலங்கையில் உள்ள மிக பழமையான முருகன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு, தாந்தாமலை அருள்குமி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
உலக நாச்சி அரசியினால் புனரமைக்கப்பட்டு காலம்காலமாக ஆலய உற்சவம் தமிழர்களின் பண்பாடுகளுடன் நடைபெற்றுவரும் நிலையில் நேற்றும் பாரம்பரிய சம்பிரதாயங்களுடன் உற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் இந்த வருடாந்த மஹோற்சவ திருவிழா ஆரம்பமானது.
நேற்று காலை தாந்தாமலையில் உள்ள மலைப்பிள்ளையார் ஆலயத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.
ஆதனை தொடர்ந்து முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடித்தம்பத்தில் விசேட பூஜையினை தொடர்ந்து கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
தாந்தாமலை முருகன் ஆலயத்தில் நடைபெறும் கொடியேற்றமானது ஏனைய ஆலயங்களில் நடைபெறும் கொடியேற்ற திருவிழாக்களில் இருந்து வேறுபட்டு இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.
18 தினங்கள் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் 2ஆம் திகதி இங்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.