மத நம்பிக்கை காரணமாக குழந்தைகளுக்கு “தட்டம்மை தடுப்பூசி” செலுத்துவதை சிலர் தவிர்த்து வருவதாகவும், இதனால் தட்டம்மை அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ”அண்மையில் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட 15 குழந்தைகளில் 7 பேருக்கு தட்டம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அத்துடன் குறித்த குழந்தைகள் அனைவருக்கும் தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் சுவாசக் குழாய் வழியாக உடலுக்குள் நுழைந்து சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றும். காய்ச்சல், சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் கண் சிவத்தல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
சில மத நம்பிக்கைகள் காரணமாக தடுப்பூசி போடுவதை சிலர் தவிர்ப்பதால் அம்மை நோய் பரவும் அபாயம் உள்ளது ” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் தெற்காசியாவில் தட்டம்மை நோயை இல்லாதொழித்த 5 நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.