இலங்கையை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தும் டிஜி இகோன் வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என்று தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தொழிநுட்ப அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொருளாதார ஒழுங்குபடுத்தல் கொள்கை பொறிமுறையொன்றை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் பிரதான வேலைத்திட்டமாக டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் இதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் மூலம் இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வேலைத்திட்டத்தின் முதல்கட்ட பணிகளுக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மென்பொருள் மேம்பாட்டுச் செயற்பாட்டிற்கே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் முழுமையான மேற்பார்வையின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், அடுத்த வருட முற்பகுதியில் 5ஜி தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இவ்வாறு பல வேலைத் திட்டங்களை மையப்படுத்தியே டிஜி இகோன் வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.