25ஆவது ஆசிய மெய்வல்லநர் சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை வீராங்கனை நதீஷா ராமாநாயக்க தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
தாய்லாந்து- பேங்கொங்கில் நடைபெற்றுவரும் இந்த தொடரின் இரண்டாவது நாளான நேற்று (வியாழக்கிழமை) பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற நதீஷா ராமாநாயக்க, போட்டி தூரத்தை 52.61 செக்கன்களில் நிறைவு செய்து தங்க பதக்கத்தை வென்றார்.
28 வயதான நதீஷாவிற்கு பலத்த போட்டியைக் கொடுத்த உஸ்பெகிஸ்தானின் பரிடா சொலிவா போட்டி தூரத்தை 52.95 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியாவின் ஐஸ்வர்யா கைலாஷ் 53.07 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
நதீஷா ராமாநாயக்க தங்;கபதக்கத்தை வென்றதன் மூலம் இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கைக்காக முதலாவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
400 மீட்டர் ஓட்டப் போட்டியில் அவரது அதி சிறந்த நேரப் பெறுதியாகவும் இது பதிவாகியதுடன், பெண்களுக்கான 400 மீட்டரில் இலங்கை வீராங்கனையொருவரால் பதிவு செய்யப்பட்ட 3ஆவது அதி சிறந்த நேரப் பெறுதியாகவும் இது பதிவானது.
இறுதியாக 2000ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 400 மீட்டரில் தமயந்தி தர்ஷா ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதற்கு பிறகு 23 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கான 400 மீட்டரில் நதீஷா ராமநாயக்க தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அதேபோல, ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் இலங்கைக்கான 8ஆவது தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தவராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார். அத்துடன், 50 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை வென்ற 20ஆவது தங்கப் பதக்கமாகவும் இது பதிவானது.
அதுமாத்திரமின்றி, நதீஷா ராமநாயக்க ஆசியாவில் வென்ற முதலாவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 800 மீட்டரில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.