2761 முறைகள் அவசர உதவி எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்திய பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜப்பானில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
தலைநகர் டோக்கியோவை சேர்ந்த ஹிரோகோ ஹட்டகமி எனும் பெண்ணே கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு மே மாதம் வரை சுமார் மூன்று வருடங்களான அவசர உதவி எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்தி வந்துள்ளார்.
இவர் ஒவ்வொரு முறையும் அழைப்பினை ஏற்படுத்தும் போது வயிற்று வலி,கால் வலி என வெவ்வேறு காரணங்களை தெரிவித்து வந்துள்ளார் எனவும் அவை அனைத்துமே பொய்யான காரணங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பெண் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில் ”தான் தனியாக இருப்பதாகவும், தான் கூறுவதை யாராவது கேட்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.