நாயுடன் 2 மாதங்களாக நடுக்கடலில் தத்தளித்த முதியவரொருவர் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் 51-வயதான டிம் ஷேட்டாக்(Tim Shaddock) என்பவரே இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் பெல்லா எனும் தனது நாயுடன் மெக்சிகோவின் லா பாஸ் பகுதியிலிருந்து பிரென்ச் பாலினேசியா பகுதிக்கு ஒரு படகில் கடற்பயணம் மேற்கொண்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரின் படகு புயலால் சேதமடைந்தது. இதனால் பல நாட்கள் அவரும், பெல்லாவும் கடலில், பச்சை மீனை உண்டும், மழை நீரை குடித்தும் தன்னந்தனியே பல நாட்களாக உயிர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருந்த பகுதிக்கு அண்மையில் ஒரு இழுவை படகோடு இணைந்த ஒரு ஹெலிகொப்டரானது சென்றுள்ள நிலையில் அதிஷ்டவசமாக டிம்மை அவர்கள் கண்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இது குறித்து உடனடியாக மீட்புப் படையினருக்குத் தெரியப்படுத்த, அங்கு விரைந்த மீட்புப் படையினர் டிம்மையும் அவரது நாய் பெல்லாவையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்நிலையில் டிம் மற்றும் பெல்லா நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் இருவரின் உடல் இயக்கங்கள் சீராக இருப்பதாகவும், அவர்களை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளனர். அதே சமயம் தனியாக கடலில் பல நாட்கள் இருந்ததால் தற்போது நல்ல உணவும், ஓய்வும் மாத்திரமே தான் பெற விரும்புவதாக டிம் கூறியுள்ளார்.