இந்தியாவின் மூன்றாவது சந்திர ஆய்வுப் பணியாக தற்போது சந்திரயான்-3 ஏவப்பட்டுள்ள நிலையில் அது வெற்றியளித்தால் நிலவின் மேற்பரப்பில் தனது விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடாக இந்தியா விளங்கும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்டது. 2019 இல் சந்திரயான்-2 விண்கலம் அதன் மென்மையான தரையிறக்கத்தின் போது சவால்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரோவின் அடுத்தகட்ட முயற்சியாக இது அமைந்துள்ளது.
இந்த முயற்சி வெற்றியளித்தல் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலமாக சந்திரயான்-3 இருக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அத்தோடு இது இந்தியாவின் தொழில்நுட்ப வலிமை மற்றும் தைரியமான விண்வெளிப் பயண லட்சியங்களை உலகிற்கு எடுத்துக்காட்டும்.
சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கம், சந்திரனில் ரோவர் உலாவுதல் மற்றும் அறிவியல் சோதனைகளை நடத்துவதே சந்திரயான்-3 பணியாகும்.குறித்த விண்கலம் பூமியிலிருந்து சந்திரனுக்கு பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது அதாவது ஓகஸ்ட் 23 அன்று தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரன்-2 இல் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க முடியாதபோது என்ன தவறு ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து மேலும் பல தொழிநுட்பங்களை புகுத்தி உள்ளதாகவும் இந்த முறை வெற்றியைப் பெறுவோம் என்றும் இஸ்ரோவின் முன்னாள் பணிப்பாளர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.