இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவுக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை நேற்று மேற்கொண்டுள்ளார்.
நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறிய அவருக்கு, டெல்லியில் வைத்து இந்திய வெளிவிவகர துணை அமைச்சரான முரளிதரனால் விசேட வரவேற்று அளிக்கப்பட்டது.
இதன்பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கருடன் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியை இதன்போது வரவேற்ற இந்திய வெளிவிவகார அமைச்சர், இருநாட்டு உறவுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார்.
இந்த நிலையில் இன்று காலை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
டெல்லியில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை, இந்து சமுத்திய பிராந்திய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதனையடுத்து, இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், முதன் முறையாக இந்தியப் பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ள இவர், இரு தரப்பு ஒப்பந்தங்கள், தமிழ் மக்களின் விவகாரம், பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து மீள இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.