எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு, உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணியில் இணைவதற்கு, 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சார்பாக உருவாக்கப்படும் இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பு பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா மேற்கொள்வதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணியில் இணைவதற்காக, கடந்த காலங்களில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதுடன், சில கலந்துரையாடல்கள், நாடாளுமன்ற அமர்வுகளுக்கு மத்தியில், நாடாளுமன்றின் வேறுபட்ட இடங்களில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனும், மொட்டுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் எனவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய கூட்டணியின் அலுவலகம், இராஜகிரிய பகுதியில், அடுத்தவாரம் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்தப் புதிய அரசியல் கூட்டணியை அறிவிக்க திட்டமிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.