லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
‘பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரும் விரிவான பகுப்பாய்வு இல்லாமல் சம்பவம் குறித்து முன்கூட்டியே முடிவுகளை எடுப்பது நியாயமற்றது.’ என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க தெரிவித்தார்.
‘எனவே, மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக, சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துவது அவசியம்’ என்றும் வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தை தீவிர சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து, இடதுபுற சிறுநீரகத்தை அகற்ற அறிவுறுத்திய மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக குறித்த குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இருந்தபோதிலும், அறுவை சிகிச்சையின் போது ஆரோக்கியமான வலது சிறுநீரகமும் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் பின்னர் தெரிவித்ததாக குழந்தையின் பெற்றோர் கூறுகின்றனர்.
மேலும், எந்த சிறுநீரகமும் செயற்படாத குழந்தைக்கு, தகுந்த சிறுநீரகம் மாற்றப்படும் வரை, ஹீமோடையாலிசிஸ் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தீங்கு விளைவிக்கும் கிருமியால் குழந்தை இறந்துள்ளது.
உயிரிழந்த குழந்தை கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்ததுடன், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (28) உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் , குறித்த சிறுவன் உயிரிழந்தமைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
சிறுநீரக சத்திர கிசிச்சையின் பின் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டதன் பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதேவேளை, முஹம்மது ஹம்தி எனும் சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜயசூரிய தெரிவித்துள்ள நிலையில், சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.