மக்களை ஒடுக்கி அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவித உடன்பாடோ அல்லது இணக்கப்பாடோ இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தீவிர இடதுசாரி அல்லது தீவிர முதலாளித்துவ கொள்கையை விடுத்து மூன்றாவது வழியை பின்பற்றும் கட்சியாக இந்நாட்டு மக்களின் மனித உரிமைகள் மட்டுமன்றி பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உரிமைகளையும் பாதுகாத்துக் கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.
13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடிய போதிலும் முறையான மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளது.
இப்படியான பொய்யான மோசடி அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தாங்கள் தயாராக இல்லையென்றாலும், நாட்டுக்கு சாதகமான மற்றும் சரியான முடிவுகள் எடுக்கப்படும் இடத்தில் பதவிகள் சலுகைகளை நிராகரித்து சரியான நிலைப்பாட்டில் நிற்கின்றோம்.
தொழிலாளர் சமூகத்திற்கு எதிரான அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட யோசனைகளில் உள்ள மனிதாபிமானமற்ற முன்மொழிவுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
சர்வதேச உடன்பாடுகள் மற்றும் கொள்கைகளை மீறி, மொழிக் கொள்கைகளை மீறி, அரசியலமைப்பை மீறி அடிப்படை உரிமைகளை மீறிய அரசாங்கம் முன்வைத்திருக்கும் மக்கள் விரோதப் பிரேரணைகளை வன்மையாக நிராகரிக்கின்றோம்.
இங்கு மனிதாபிமானமற்ற முதலாளித்துவமே நிலவுகின்றது.
இந்நாட்டின் உழைக்கும் மக்கள் பாதுகாக்கப்படுவது வேலைவாய்ப்பினால்தான் அன்றி வேலையில்லாத் திண்டாட்டத்தினால் அல்ல.
எனவே செல்வத்தை உருவாக்குவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும்.
இதற்கு திறமையான மற்றும் இயலுமை கொண்ட பணியாளர்கள் தேவை. அவ்வாறு உருவாக்கப்படும் செல்வத்தை சமூக நீதியின் அடிப்படையில் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க வேண்டும்.
ஊழியர் சேமலாப நிதியங்களில் கை வைத்துள்ள அரசாங்கத்துடன் உடன்பாடுகளை எட்ட முடியாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.