பிரித்தானியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த ‘ஏழு குழந்தைகளைக் கொடூரமாகக் கொலைசெய்த தாதியின் வழக்கில்‘ ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரித்தானியாவில் உள்ள பிரபலமருத்துவமனையொன்றில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டுக்குள் பல குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவத்தினைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு இது குறித்த தீவிர விசாரணையைப் பொலிஸார் மேற்கொண்டனர். இச் சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ரவி ஜெயராம் என்பவர் லூசி லெட்மி என்ற செவிலியர் மீது சந்தேகத்தை எழுப்பினார்.
இதனையடுத்து பொலிஸார் லூசியின் வீட்டை சோதனை செய்த போது உயிரிழந்த குழந்தைகளின் மருத்துவ அறிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அத்துடன் உடல்நிலை சரியில்லாமல் பிறந்த குழந்தைகள் மற்றும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு லூசி அதிக அளவு பால் கொடுத்தும், இன்சுலின் மூலம் விஷத்தினை உட்செலுத்தியும், இரத்தத்தில் காற்றைக் கலந்தும் கொலை செய்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு ஏழு குழந்தைகளை அவர் கொலை செய்ததற்காகவும் ஆறு குழந்தைகளை கொலை செய்ய முயற்சித்ததற்காகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று முன்தினம் இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகியிருந்தது.
அந்தவகையில் அவருக்கு ஆயுள் தன்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இதற்கு முன்பு மூன்று பெண்களுக்கு மாத்திரமே இத்தகைய சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.