ஆளும் தரப்பினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் தொழிலாளர்களின் வீடு சேதமாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று குழப்பநிலை ஏற்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,
மாத்தளை, எல்கடுவ, ரத்வத்த பகுதியில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் வசித்த தற்காலிக வீட்டை, அத்தோட்ட உதவி முகாமையாளர் தனது அடாவடிக் கும்பலுடன் சேர்ந்துவந்து, அடித்து நொறுக்கியுள்ளார்.
இது அரச நிலத்தில் இடம்பெற்றுள்ள ஒரு அசம்பாவித சம்பவமாகும். இந்த அநீதிக்கு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும்.
அமைச்சர் அங்கு சென்று, நடிப்பது முக்கியமல்ல. இந்த அரசாங்கமானது மலைநாட்டு மக்களுக்கு எவ்வாறு செயற்படுகிறது என்பதை இந்த சம்பவத்தின் ஊடாக தெரிந்துக் கொள்ள முடிந்துள்ளது.
இந்த மக்களை அச்சுறுத்திய, அவர்களின் வீடுகளை அடித்து நொறுக்கிய அந்த அதிகாரி நாடாளுமன்றுக்கு பதில் கூற வேண்டும்.
பெருந்தோட்ட மக்களின் வியர்வையால்தான் எமது நாட்டுக்கு டொலர் கிடைக்கிறது.
அம்மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக, ஆளும் தரப்பினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
இந்த சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.