சந்திரயான் – 3, நிலவின் தென் துருவப் பகுதியில் கடந்த புதன்கிழமை 23ஆம் திகதி தடம் பதித்துள்ளமை இந்திய விண்வெளிச் சாதனையின் புதிய உச்சமாகும். அந்த வகையில் இந்தியா விண்வெளிச் சாதனையை நிலைநாட்டுவதற்கு முன்னதாக வரலாற்றில் கடந்த வந்த மிகவும் கடினமானது.
இந்தியாவின் தலைசிறந்த வானியல் அறிஞரான ஆர்யபட்டாவின் பெயரில் 1975 ஏப்ரல் 19இல் ஏவப்பட்டது. 5 கோடி ரூபா செலவில் முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப் பட்டது ஆர்யபட்டா. சுமார் 250 பொறியாளர்கள் இரண்டு ஆண்டுகள் உழைத்ததன் பலனாக ஆர்யபட்டா வடிவமைக்கப்பட்டது.
இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி என்று அழைக்கப்படும் ‘இன்சாட்’ ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய உள்நாட்டுத் தகவல் தொடர்பு அமைப்பு என்ற பெருமைக்குரியது. 1983இல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், தொலைத்தொடர்புத் துறை, இந்திய வானிலை ஆய்வுத் துறை, அகில இந்திய வானொலி, தூதர்ஷன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவானது.
இன்சாட் தொகுதியில் அனுப்பப்பட்ட 9 செயற்கைக்கோள்களால்தான், இந்தியாவில் தகவல் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பில் பல்வேறு உச்சங்களை எட்ட முடிந்தது. இந்தத் தொகுதியில் மொத்தம் 21 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட நிலையில் அவற்றில் 11 இயக்கத்தில் இருக்கின்றது.
அதேபோன்று பிஎஸ்எல்வி, இந்தியாவின் மிக முக்கிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு உதவி இந்தியாவின் விண்வெளி சாதனைகள் பலவற்றுக்கும் காரணமாக விளங்குகிறது.1994 முதல் 2016 வரை 38 முறை பிஎஸ்எல்வி விண்ணில் பாய்ந்துள்ளது. இதில் 37 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று, 121 செயற்கைக்கோள்களை செலுத்தியுள்ளது.
இதில் 79 செயற்கைக் கோள்கள் சுமார் 20 வெளிநாடுகளுக்கு சொந்தமானவை, 42 இந்தியாவுக்கு சொந்தமானவை. சந்திரயான் 1, மங்கள்யான், அஸ்ட்ரோசாட், எஸ்ஆh்இ -1, நேவிக் ஆகிய முக்கியமான திட்டங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்வதற்கு உதவியாக இருந்தது பிஎஸ்எல்வி ஏவுகலன்கள் தான்.
நிலவுக்கு செயற்கைக்கோளை அனுப்பி ஆய்வு செய்வது என்ற எண்ணம் 1999ஆம் ஆண்டே இந்திய விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது. அதற்கு இந்திய அரசும் ஒப்புதல் அளிக்கவே சந்திரயான் 1 திட்டம் 386 கோடி ரூபா திட்ட மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டு திட்டத்துக்கு மயில்சாமி அண்ணாதுரை தலைவராக இருந்தார்.
பிஎஸ்எல்வி எக்ஸ் எல் ரொக்கெட் மூலம் 2008 ஒக்டோபர் 22ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. ஆனாலும் அதன் இலக்கை எட்டமுடிந்திருக்கவில்லை. இதனையடுத்து ஏனைய கோள்களுக்குப் பயணம் செய்யும் திட்டத்தை 2010ஆம் ஆண்டு 454 கோடி ரூபா மதிப்பில் இந்தியா ஆரம்பித்தது. அமெரிக்காவின் முதலாவது செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டமான ஃபோனிக்ஸைக் காட்டிலும் மங்கள்யானின் திட்ட மதிப்பு 10 மடங்கு குறைவாகும்.
இஸ்ரோவின் கோள்களுக்கு இடையிலான முதலாவது பயணத் திட்டமும் இதுவாகும். மேலும், 2014 செப்டம்பர் 24ஆம் திகதி செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான் இணைந்ததன் மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பிய நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.
ஐஆர்என்எஸ்எஸ் எனப்படும் ‘நேவிக்’ திட்டம், இந்தியாவின் வரைபடத் துல்லியத்தன்மைக்காக ஏவப்பட்டது. 7 செயற்கைக் கோள்களைக் கொண்ட இந்தத் தொகுப்பானது கடலோடிகள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள், பேரிடர் மேலாண்மை, அரசின் பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் இராணுவத்துக்கும் பெரிதும் பயன்படுகிறது.
2013 ஜூலையில் தொடங்கிய இந்தத் திட்டத்தின் கீழ் 2018 வரை 9 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. இரண்டு தோல்வியில் முடிவடைந்தாலும் திட்டப்படி 7 செயற்கைக்கோள்கள் இயக்கத்தில் இருந்து வருகின்றன.
2016 ஜூன் 22ஆம் திகதி இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு மைல் கல்லாகும். பிஎஸ்எல்வியின் 36ஆவது ஏவுகலன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. ஒரே ஏவுகலனில் அதிகப்படியான செயற்கைக்கோள்களை வைத்து இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது அதுதான் முதல் முறை.
மொத்தம் 20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். அதில், அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, இந்தோனேஷியா போன்ற நாடுகளின் செயற்கைக்கோள்களும் அடங்கும்.
அதன் பிறகு 2017 பெப்ரவரியில் அந்த சாதனையை தகர்க்கும் விதமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை ஒரு ரொக்கெட்டில் வைத்து அனுப்பி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.