இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 14 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளது.
இலங்கைக்கு வழங்கியுள்ள 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியின் இரண்டாவது தவணையை விடுவிப்பதற்கு முன்னதாக இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 27 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்யவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற 2.9 பில்லியன் டொலர் நீடித்த கடன் வசதி தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, பல இலக்குகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
ஜூலை மாத இறுதியளவில் இந்த இலக்குகளில் 35 வீதமானவற்றை மாத்திரமே இலங்கை நிறைவேற்றியிருந்ததாக வெறிட்டே ரிசேர்ச் நிறுவனம் அண்மையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதில் மேலும் 43 வீதமான இலக்குகளை நிறைவேற்றுவதற்கான நவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இதன் கீழ், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்கான திட்டமொன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.