யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைப் பகுதிகளில் இரும்புத் திருட்டில் ஈடுபட்ட 6 பேரைக் காங்கேசன்துறைப் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.
நல்லிணக்கபுரம் மற்றும் தையிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீமெந்து தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதிகள் கடந்த 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட நிலையில் கடந்த யூலை மாதம் முதல் இராணுவத்தினர் அப்பிரதேசத்தில் இருந்து வெளியேறியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
எனினும் அக்காணிகள் இதுவரையிலும் காணி உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை எனவும், இதனால் அப்பிரதேசத்திற்குள் காணி உரிமையாளர் செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி திருடர்கள் அப்பகுதிகளுக்குள் சென்று வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் உள்ளிட்டவற்றை திருடி செல்வதுடன், வீடுகளில் காணப்படும் இரும்புகளையும் உடைத்துத் திருடி செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல தடவைகள் பொலிஸாருக்கு அறிவித்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.