பெண்ணொருவர் நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற சம்பவம் அவுஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கெய்ட்லின் அஸ்லோப் என்ற 27 வயதான பெண்ணே உணவருந்திக் கொண்டிருந்த போது தவறுதலாக நாக்கை கடித்துள்ளார்.
இதன்போது அவருக்கு மிகுந்த வலி ஏற்பட்டுள்ளதோடு நாட்கள் செல்லச் செல்ல உடல் நலப் பிரச்சினைகளும் அவருக்கு ஏற்பட ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக அவரது சருமத்தின் நிறம் ஊதா நிறத்தில் மாற்றமடையத் தொடங்கியுள்ளதோடு, தோலும் உறியத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது நாக்கும் கறுப்பு நிறத்தில் மாற்றம் அடையத் தொடங்கியுள்ளதோடு மூச்சு விடுவதிலும் அவருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கெய்ட்லினுக்கு ஏற்பட்டிருப்பது Ludwig’s angina என்ற அரிதான நோய் எனவும், இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு செப்சிஸ் மற்றும் உறுப்பு செயலிழப்பு ஏற்படும் என்பதையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த நிலையில், கெய்ட்லினுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரை கட்டாய கோமா நிலைக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
ஏனென்றால் உடலில் உள்ள ஒக்ஸிஜன் அளவை தக்க வைப்பது, மூச்சுப் பாதையை சீரமைப்பது, உறுப்புகளின் செயலிழப்பை தடுப்பது போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள இந்த கோமா நிலை கட்டாயமாகும் எனக் கூறப்படுகின்றது.
போராட்டம் மிகுந்த இந்த சிகிச்சைகளுக்குப் பிறகு இப்போது கெய்ட்லின் குணமடைந்துள்ளார். இந்நிலையில் தனக்கு இரண்டாவதாக உயிர் கொடுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.