”கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே போராடுகின்றார்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி காரியாலயத்தில்நேற்று முன்தினம் (20) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” கடந்த 17ம் திகதி எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் திருமலை கப்பல் துறையில் திலீபனின் ஊர்தியுடன் சென்ற போது, பேரினவாத செயற்பாட்டளர்களால் அவர் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டதோடு வாகன ஊர்தியும் அடித்து நொருக்கப்பட்டது.
இச்சம்பவத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்துவரும் நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானே குறித்த பவனியை கொண்டு செல்வதற்கு பொலிஸாரிடம் அனுமதி பெறவேண்டும் எனவும் நினைவேந்தல் செய்ய சட்ட ஒழுங்கை மதித்து நடக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழனாக இருந்து இந்த கருத்தை வெளியிட்டிருப்பாரானால் யதார்த்மான கருத்தை வெளியிட்டிருப்பார். மாறாக தொடர்ச்சியாக தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவரது எஜமானுக்கு விசுவாசமாகககருத்தை வெளியிட்டுள்ளார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை மீறி பல்வேறு விதமான செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை விவகாரம் அந்த பகுதியிலே சட்டவிரோதமாக குடியேறி காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்தால் வெளியேறுமாறு கட்டளை பிறப்பித்து ஒரு வருடம் கடந்த நிலையில் அதனை மீறி பெரும்பான்மை இனத்தவர்கள் அந்த மேச்சல் தரையில் உழுது கொண்டு பயிர் செய்து கொண்டு எமது பண்ணையாளர்களை அடித்து துரத்தியுள்ளனர்.
அதேவேளை திருகோணமலையில் பல விகாரைகள் சட்டவிரோதமாக கட்டுப்படுகின்றன. அதனை தடை செய்யாமல் அனுமதிவழங்கியதுடன் மட்டக்களப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதுடன் எத்தனையோ வளங்கல் சுரண்டப்படுகின்றது. இது சட்டவிரோதமாக நடக்கின்ற செயற்பாடுகள் இந்த விடையங்களை எல்லாம் விட்டுவிட்டு எங்கள் மீதும் குற்றச்சாட்டை வைப்பதுடன் தியாக தீபம் திலீபன் எனும் மாகானுடைய அகிம்சைவழி போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளார்.
எனவே ஆளுநர் நேர்மையானவர் என்றால் சட்டம் ஒழுங்கை அங்கே பார்த்திருக்க வேண்டும் இங்கே இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பது மிகவும் நகைப்பிற்குரிய விடையம்” இவ்வாறு தெரித்துள்ளார்