”அஸாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்துவந்து, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” அரசாங்கமானது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை மூடி மறைக்க முற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனாலும், மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் இன்று வெளியே வந்துக் கொண்டிருக்கின்றன. அஸாத் மௌலானா கூறிய கருத்துக்கள் உண்மையா- பொய்யா என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டுமெனில், முதலில் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
அவரை நாட்டுக்கு அழைப்பித்து விசாரணைகளை மேற்கொள்ளாமல், இன்னமும் உண்மைகளை மூடி மறைக்க அரசாங்கம் முற்படக்கூடாது. ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மக்கள் மீதுதான் இந்த அரசாங்கம் ஆட்சி அமைத்துள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.