அரசாங்கத்தின் ஊழல் கொள்கை குறித்து சர்வதேச நாணய நிதியம்(IMF) கவலை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சரியான இலக்குகளை நிறைவேற்றாததால் இரண்டாவது கடன் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று நமது நாட்டில் மிகவும் பரிதாபகரமான சூழல் நிலவிவருகின்றது. நாட்டை ஆளும் அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகளை கொண்டு வந்து நாட்டை வங்குரோத்தாக்கி விட்டுள்ளது.
வரிச்சுமையினால் மக்கள் அவதியுறும் நிலைமை தொடர்கிறது. நாட்டில் 65 சதவீதம் பேர் உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வேளை உணவருந்திய மக்கள் இப்போது 2 வேளை மாத்திரமே உணவருந்துகின்றனர். இதனால், குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. எனினும், அரசாங்கம் மோசடி, இலஞ்சம், பொய், ஊழல் கொள்கையை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. மின்கட்டணம்,நீர் கட்டணத்தை ஒருமுறை அதிகரித்த அரசாங்கம், மீண்டும் ஒருமுறை மின்கட்டணத்தை அதிகரிக்க தயாராகி வருகின்றது.
நாட்டு மக்களின் வாழ்வாதாரம் அதலபாதாளத்தில் இருந்தாலும், மக்கள் கஷ்டப்பட்டாலும், நாட்டை ஆட்சி செய்பவர்கள் வெளிநாட்டு விஜயங்கள் சென்று சுகபோகங்களை அனுபவித்துவருகின்றனர். அரசாங்கத்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாவிட்டால் தேர்தலுக்கு செல்ல வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார் .