எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 9ஆவது `ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்
` தொடருக்கு கனடா அணி தகுதி பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள இத்தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. இத் தொடரில் ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மற்ற அணிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் பெர்முடாவின் ஹாமில்டனில் நடைபெற்ற அமெரிக்க பிராந்திய தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் பெர்முடா மற்றும் கனடா அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கனடா முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்து 132 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து 133 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பெர்முடா அணி, கனடா வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.5 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனால் கனடா அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கனடா அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு கனடா அணி தகுதி பெறுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.