பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 344 ஓட்டங்களை குவித்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு 345 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் தசும் சானக முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் முதலாவது விக்கெட் 2 ஆவது ஓவரில் இழக்கப்பட்டது குஷால் பெரேரா ஓட்டங்கள் எதுவும்பெறாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து குஷால் மெண்டிஸ் மற்றும் பத்தும் நிசங்க ஆகியோரின் நிதான துடுப்பாட்டம் காரணமாக இலங்கை அணி வலுவான நிலைக்கு சென்றது.
இருப்பினும் 17.2 ஆவது ஓவரில் 107 ஓட்டங்களை அணி பெற்றுக்கொண்டிருந்த வேளை பத்தும் நிசங்க 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய சதீர சமரவிக்ரம, குஷால் மென்டீசுக்கு கைகொடுக்க இலங்கை அணி 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டபோது 122 ஓட்டங்களோடு குஷால் மெண்டிஸ் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இது அவர் ஒருநாள் போட்டியில் பெற்றுகொட்ன 3 ஆவது சதமாகும். இதனை தொடர்ந்து வந்த சரித அசலங்க ஒரு ஓட்டத்துடனும் தனஞ்சய டி சில்வா 25 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் தசும் சானக 12 ஓட்டங்களுடனும் அட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சதீர சமரவிக்ரம 47.5 ஆவது ஓவரில் 108 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். இது ஒருநாள் போட்டியில் அவர் பெற்றுக்கொண்ட முதலாவது சாதமாக பதிவாகியது.
இறுதியில் 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து 344 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஹசன் அலி 4 விக்கெட்களையும் ஷஹீன் அப்ரிடி, மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.