நீ நீதியாக இருக்கிறாய் என்பதற்காக உலகம் உன்னிடம் நீதியாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்காதே. அவ்வாறு எதிர்பார்ப்பது என்பது நீ சிங்கத்தைச் சாப்பிட மாட்டாய் என்பதற்காக சிங்கம் உன்னைச் சாப்பிடாது என்று நம்புவதற்கு சமம் –
ஆபிரிக்கப் பழமொழி
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான போர் மீண்டும் ஒரு தடவை இது ஒரு கேடுகெட்ட உலகம் என்பதனை நிரூபித்திருக்கிறது. அரசியலில் அறம் கிடையாது. நீதிநெறி கிடையாது. தர்மம் கிடையாது. அரசியல் பொருளாதார ராணுவ நலன்கள் மட்டுமே உண்டு. அந்த நலன்களின் மீதான பேரம் மட்டுமே உண்டு.
இந்தப் போரில் தமிழ் மக்கள் எந்த பக்கம் நிற்க வேண்டும் என்று கேட்டால் ஒடுக்கப்படும் பலஸ்தீனர்களின் பக்கம் தான் நிற்க வேண்டும். ஆனால், பலஸ்தீன தன்னாட்சி அதிகார கட்டமைப்பானது தமிழர்களோடு இல்லை. அது முன்பொரு தடவை மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயர் விருதை வழங்கி கௌரவித்தது. பலஸ்தீனர்களுக்கான இலங்கை நட்புறவு அமைப்பின் தலைவராக மஹிந்த ராஜபக்ச இருந்தார்.
ஆனால் அதே பாலஸ்தீனம் சில தசாப்தங்களுக்கு முன்பு ஈழத்தின் ஆயுதப் போராளிகளுக்கு பயிற்சி வழங்கியது. அவ்வாறு பயிற்சி பெற்ற இயக்க உறுப்பினர்கள் “பிஎல்ஓ ட்ரெய்னீஸ் “என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களில் பலர் விடுதலைப் புலிகள் அல்லாத ஏனைய இயக்கங்களில் முக்கிய பொறுப்புக்களை வகித்துமிருக்கிறார்கள். ஈழப்போரின் தொடக்க காலங்களில், குறிப்பாக எண்பதுகளின் நடுப்பகுதி வரையிலும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை ஈழப் போராட்டம் ஒரு முன்னுதாரணமாக கொண்டிருந்தது. பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்காவில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள், ஆபிரிக்க வட்டகைக்குள் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள்…போன்ற பல்வேறு தேசிய விடுதலைப் போராட்டங்கள் மற்றும் இடதுசாரி விடுதலைப் போராட்டங்களை ஈழப் போர் தனக்கு முன்மாதிரியாக கொண்டிருந்தது. பேராசிரியர் நுகுமான் மொழி பெயர்த்த பலஸ்தீனக் கவிதைகளின் தொகுப்பை அந்நாட்களில் ஈழப் போராளிகளும் வாசகர்களும் விரும்பி வாசித்தார்கள்.
ஆனால் அரசியலில், அறம் தர்மம் நீதி என்பவற்றை விட அரசியல் பொருளாதார நலன்களே உறவுகளை தீர்மானிக்கின்றன என்பதனை பின்வந்த தசாப்தங்கள் நிரூபித்தன.
என்பதுகளின் நடுப்பகுதிக்குப் பின் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பாகிய மொசாட் பயிற்சிகளை வழங்கியதாக, அந்த அமைப்பின் உளவாளிகளில் ஒருவராகிய, விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி தனது நூல் ஒன்றில் எழுதி இருந்தார். “ By Way of Deception : The Making and Unmaking of a Mossad Officer ” என்ற அந்த நூலை எழுதிய பின் அவர் கனடாவில் தஞ்சம் புகுந்தார். அந்த நூலை விடுதலைப் புலிகள் இயக்கம் “வஞ்சகத்தின் வழியில்” என்ற பெயரில் மொழிபெயர்த்து வைத்திருந்தது.அதைத் தனது போராளிகளுக்கு வாசிக்க கொடுத்தது.
அந்த நூலில் விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி எப்படி ஒரே மைதானத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை அரசு படையினருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன என்பதனை எழுதியிருக்கிறார். மேலும் இலங்கை அரச படை அதிகாரிகளைக் குறித்து தரக்குறைவான குறிப்புகளும் அதில் உண்டு. அக்குறிப்புகளுக்கு எதிராக அப்போதிருந்த ஜனாதிபதி பிரேமதாச விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கிக்கு எதிராக வழக்குத் தொடுக்க முயற்சித்தார்.
இது பழைய கதை. ஆனால் அந்த கதையில் நிச்சயமாக அறம், தர்மம், நீதி, நியாயம் எதுவும் கிடையாது. நலன்சார் உறவே உண்டு. அக்காலகட்டத்தில் ஈழப் போராளிகளுக்கு பயிற்சிகளை வழங்கிய அதே இஸ்ரேல், இலங்கை அரசாங்கத்துக்கு டோரா விரைவுப் படகும் உட்பட உயர் தொழில்நுட்பப் படைக்கலன்களை வழங்கியது.
அதன்பின் வந்த காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட பலஸ்தீன தன்னாட்சி அதிகார சபையானது மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயர் கௌரவத்தை வழங்கியது. 2014 ஆம் ஆண்டு பலஸ்தீன தன்னாட்சி அதிகார சபை மகிந்தவுக்கு பாலஸ்தீனத்தின் நட்ச்சத்திரம் – Star of Palestine – என்ற விருதை வழங்கியது.
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பலஸ்தீனமும் உட்பட சுதந்திரத்துக்காக போராடி வென்ற கியூபா போன்ற நாடுகள் அரசாங்கத்தோடு நின்றன. இப்பொழுதும் நிற்கின்றன. ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானங்களின் போது கியூபா இன்று வரை அரசாங்கத்திற்கு ஆதரவாகத்தான் வாக்களித்து வருகிறது. எனவே, உலகில் போராட்டங்களின் மூலம் விடுதலையை வென்றெடுத்த எல்லா நாடுகளும் போராடிக் கொண்டிருக்கும் தேசிய இனங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அல்லது பக்கபலமாக இருக்கும் என்பவையெல்லாம் யதார்த்தம் அல்ல.
இது கடந்த நூற்றாண்டின் இறுதியில் முடிவுக்கு வந்த கெடுபிடிப் போருக்கு பின்னரான ஒரு நிலைமை மட்டுமல்ல. கெடுபிடிப் போரின் போதும் நிலைமை அதுதான். ஒரு நாட்டின் அரசாங்கத்தை அமெரிக்கா ஆதரித்தால், அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் அமைப்பை மொஸ்கோ சார்பு அணிகள் ஆதரிக்கும். அப்படித்தான் ஈழப்போரை இந்தியா ஆதரித்தது. அப்படிப் பார்த்தால் உலகில் நிகழ்ந்த பெரும்பாலான தேசிய விடுதலைப் போராட்டங்கள், இரண்டு உலகப் பேரரசுகளின் நிழல் போரை நிஜப் போராக முன்னெடுத்தவைதான். அதுமட்டுமல்ல அதைவிடக் குரூரமான வார்த்தைகளில் சொன்னால், பேரரசுகளின் புதிய ஆயுத தளபாடங்களைப் பரிசோதிக்கும் ஆய்வுக்கூடங்களாக அந்தப் போர்கள் காணப்பட்டன என்பது. இப்பொழுதும் உக்கரைனில் நடப்பது அதுதான். மேற்காசியாவில் நடப்பதும் அதுதான்.
அதாவது, நவீன அரசியலில் அறநெறிகள், நீதிநெறிகள் தர்மம் போன்றவை கிடையாது. நிலையான நலன்கள் மட்டுமே உண்டு.
இதிலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஈதமிழர்களில் ஒரு பகுதியினர் நம்புகிறார்கள்,அரசியலில் அறம் முக்கியம் என்று. “அறம் பிழைத்தவனுக்கு அறமே கூற்றுவன்” ஆகும் என்று சிலப்பதிகார உதாரணத்தையும் அவர்கள் சுட்டிக் காட்டுவார்கள். அதே சமயம் இன்னொரு பகுதியினர் வேறு விதமாக சிந்திக்கிறார்கள். தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக எந்தப் பிசாசோடும் கூட்டுச் சேருவேன் என்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன சில தசாப்தங்களுக்கு முன் கூறியிருந்தார். அவ்வாறு உலகில் உள்ள எல்லாப் பிசாசுகளோடும் கூட்டச் சேர்ந்துதான் இலங்கை அரசு தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்கியது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில், சிறிய, அரசற்ற, போராடும் இனமாகிய தமிழ் மக்கள் தர்மம், நீதி போன்றவற்றைக் கதைப்பதை விடவும் எந்தப் பிசாசோடு கூட்டுச் சேர்ந்தாவது தமது இலக்குகளை வெல்லலாமா என்று சிந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள்.
அந்த அடிப்படையில் இந்துத்துவா என்ற கொழுக்கியைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்கள் இந்தியாவை நெருங்கிச் செல்ல வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகிறார்கள். இப்பொழுது நடக்கும் இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தத்தில் ஈழத் தமிழர்கள் அறம் சார்ந்து முடிவெடுக்கக்கூடாது, நலன் சார்ந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். இந்தியா இம்முறை வெளிப்படையாக இஸ்ரேலை ஆதரிக்கின்றது. அந்த நிலைப்பாட்டை ஈழத் தமிழர்களும் எடுக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்துகிறார்கள்.
இந்தியா மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள எல்லா பேரரசுகளும் உலகளாவிய பொது நிறுவனங்களும் அரசியல்,பொருளாதார, ராணுவ நலன்களின் அடிப்படையில் தான் இயங்குகின்றன. உறவுகளை வைத்துக் கொள்கின்றன. இதில் தர்மத்தின் அடிப்படையில் அறத்தின் அடிப்படையில் மட்டும்தான் உறவுகளை வைத்துக் கொள்ளலாம் என்றால் அல்லது நீதிமான்களிடம் மட்டும் தான் ஈழத் தமிழர்கள் நீதியைக் கேட்கலாம் என்றால் உலகில் எந்த ஒரு பேரரசிடமும் ஈழத் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது.
நீடித்து வரும் உக்ரைன் ரஷ்ய போர், ஐநாவின் இயலாமையை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில், புதிதாக பலஸ்தீனப் போர் வெடித்திருக்கிறது.அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட பின் இந்த யுத்தம் முடிவுக்கு வரும்.அதன் பின் ஐநா ஏன் அதைத் தடுக்க முடியவில்லை என்று அறிக்கையொன்று விடும். இதுதான் வழமை . கையாலாகாத ஐநா ?
எனவே,நீதிமான்களிடம் மட்டும் தான் நீதியை எதிர்பார்க்கலாம் என்றால் ஈழத் தமிழர்கள் பரலோக ராஜ்ஜியத்திடந்தான் நீதி கேட்கலாம். மறைந்த மலையக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டைமான் செய்ததுபோல யாகந்தான் செய்யலாம். போராட முடியாது.
பேரரசுகளின் நலன் சார் உறவுகளால் பிய்த்துப் பிடுங்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம்தான் ஈழத் தமிழர்கள். எனவே ஈழத் தமிழர்கள் தமது அரசியல் இலக்குகளை அடைவது என்பது பேரரசுகளுக்கு இடையிலான நலன் சார் உறவுகளுக்குள் எப்படித் தந்திரமாகச் செயல்படுவது என்பதில்தான் தங்கியிருக்கின்றது. அவ்வாறு தந்திரமாக நடந்து கொள்வது என்பது ஈழத் தமிழர்கள் தமது போராட்டத்தின் ஆத்மாவாக இருக்கும் அறத்தைக் கைவிடுவது என்ற பொருளில் அல்ல. அந்த அறத்துக்கும் உலக யதார்த்தத்திற்கும் இடையே எப்படிச் சமநிலையைப் பேணுவது என்பதுதான்.