குழந்தைகள் மத்தியில் டெங்கு மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ச்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிரவும் சீரற்ற காலநிலையினால் இந்த நோய்கள் பரவும் நிலை உருவாகியுள்ளது. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு அதிகமாக இருப்பதால் முடிந்தவரை வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் கொதித்தாறிய நீரை பெற்றோர்கள் வழங்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன், நாட்டில் தற்போது 3 தொற்று நோய்கள் பல பகுதிகளில் பரவி வருவதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கண் நோய், வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகளுடன் கூடிய காய்ச்சல் போன்றவை பதிவாகி வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இவ்வாறான நிலைமைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் தமது சுகாதாரப் பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.