நாட்டிலுள்ள 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாரான நிலையில் உள்ளனர் என்றும் இதனால் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியிலும் 95 வைத்தியசாலைகளை மூட நேரிடும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒரு வருடம் எனும் மிககுறுகிய காலப்பகுதியில் சுமார் 1500 விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு இறுதியில் நாட்டில் இருந்த ஒட்டுமொத்த வைத்தியர்களில் 5 வீதமானோர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் 5000 வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்துக்கொண்டு வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஆகவேதான் வைத்தியர்களின் பொருளாதார நிலையை சீர் செய்து வைத்தியர்களை நாட்டில் தக்க வைத்துக்கொள்வதற்கான சூழலை உருவாக்குவது மிக அவசியம் என்று நாங்கள் நினைக்கின்றோம்.
வெளிநாடுகளுக்கு செல்ல இருக்கும் இந்த 5000 வைத்தியர்களை நாட்டில் தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுங்கள்.
இந்த 5000 வைத்தியர்கள் நாட்டின் வைத்தியத்துறைக்கு இல்லாமல் போனால் ஒட்டுமொத்த வைத்தியதுறையில் 25 வீத வைத்தியர்களுக்கான இழப்பு இந்த நாட்டுக்கு ஏற்படும்.
நாட்டில் தற்போது நிலவுகின்ற வைத்தியர் பற்றாக்குறையின் காரணமாக நாடளாவிய ரீதியிலும் 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.
அதேநேரம் நாடளாவிய ரீதியிலும் 44 வைத்தியசாலைகள் பட்டதாரி மருத்துவர்கள் இன்று பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களை கொண்டு இயங்குகின்றன.
இவ்வாறு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அல்லது மருத்துவர்கள் மருத்துவத்துறையை விட்டு விலகினால் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியிலும் 95 வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை எனில் எதிர்காலத்தில் ஏற்படும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்ற எச்சரிக்கையையும் நாங்கள் முன்வைக்கின்றோம்” என அவர் மெலும் தெரிவித்துள்ளார்.