வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமே மிகவும் சவால் மிக்க வரவு செலவுத்திட்டமாகும்.
அதில் இருந்து நாம் பெற்றுக்கொண்ட நிலையான தன்மைமை அடிப்படையாகக் கொண்டே, 2024 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், நாம் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்கவும் அவசியமான பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில், அரச வருமானம் 4127 பில்லியன் ரூபாவாகவும் அரச செலவினங்கள் 6978 பில்லியன் ரூபாவாகவும் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை 2851 பில்லியன் ரூபா என்ற பிரதான இலக்கங்களுடனேயே நாம் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.
இந்த வருட இறுதிக்குள் எமது கடன் மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்து, நாம் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு, எமக்கு மீண்டும் இயல்பான பொருளாதார நடவடிக்கைகளை தொடரக் கூடிய சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்த முடியும். அதற்காக வெற்றிகரமான பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.
கடன் பெறும் வரையரை அதிகரிக்கப்பட்டிருப்பது, மேலதிக கடன் பெறுவதற்கு அன்றி கடன் மறுசீரமைப்பு பணிகளின்போது எமக்கு அவசியமான நிதி நிலைகளை பேணிக்கொள்வதற்காகும். அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி அவசியமாகும்.
குறிப்பாக, இந்த நடவடிக்கைகளின் மூலம் 2024 ஆம் ஆண்டை பலமான பொருளாதார ஆண்டாக மாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும். பொருளாதார நடவடிக்கைகளை இயல்பாக மேற்கொள்ள ஆரம்பிக்கும் வருடமாக, 2024 ஆம் ஆண்டு அமையும் என்பது எமது நம்பிக்கையாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.