நேற்று சனிக்கிழமை (17.11.23) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. டாண் டிவி குழுமத்தின் அனுசரணையோடு ஒரு சிவில் அமைப்பு அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. எல்லாக் கட்சிப் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கட்சிகளுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதே அந்த கருத்தரங்கின் நோக்கம். கட்சிகளோடு சமயப் பெரியார்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
ஐந்து மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் மொத்தம் எழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தார்கள்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் வரவில்லை. தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்தவர்களும் வரவில்லை. ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தலைவர்கள், இரண்டாம் நிலைத் தலைவர்கள் வந்திருந்தார்கள். மதத்தலைவர்களும் வந்திருக்கவில்லை.
பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை தலைமை தாங்கினார். அரசியல் விமர்சகர்களான யதீந்திரா, நிலாந்தன் ஆகியோரும் மூத்த ஊடகவியலாளர் தனபாலசிங்கமும் உரையாற்றினார்கள்.உரைஞர்களில் ஒருவராகிய பேராசிரியர் கணேசலிங்கன் வரவில்லை.உரைகளின் நோக்கம் ஐக்கியத்தை வலியுறுத்துவது.கட்சிகளுக்கு பேச சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
அந்நிகழ்வு இந்தியாவின் தூண்டுதலால் ஒழுங்கு செய்யப்பட்டது என்று ஒரு பகுதியினர் ஏற்கனவே எழுதத் தொடங்கி விட்டார்கள். 13வது திருத்தத்தை வலியுறுத்துவதே அந்த நிகழ்வின் நோக்கம் என்றும் ஊகங்கள் கிளம்பின. ஆனால் பிரதான பேச்சாளர்கள் யாருமே 13ஆவது திருத்தத்தைத் தொடவில்லை.ஐக்கியத்தின் தேவைதான் அங்கே வலியுறுத்தப்பட்டது. கட்சிகளின் தலைவர்கள் அமைதியாக அமர்ந்திருந்து கேட்டார்கள்.
அந்த உரைகளைக் கேட்டபின் அவர்கள் ஒற்றுமைப்படுவார்களா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது.கடந்த 14 ஆண்டுகளில் கட்சிகளை ஒற்றுமைப்படுத்த எடுக்கப்பட்ட ஆகப்பிந்திய முயற்சி அது.கடந்த சுமார் 14 ஆண்டுகளாக இது போன்ற நிகழ்ச்சிகள்,சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.இங்கே ஒரு சுவாரசியமான விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்.கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் அரசியலில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சிகள் பெரும்பாலானவற்றிக்குத் தலைமை தாங்கியது மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்களே.
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த கையோடு அப்பொழுது மன்னார் மறைமாவட்ட ஆயராக இருந்த இராயப்பு யோசப் அவர்கள் அப்படி ஒரு முயற்சியை முன்னெடுத்தார்.தமிழ் குடிமக்கள் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட முதலாவது முயற்சி அது.ஆயர் ஜோசப்,தமிழ் சிவில் சமூக அமையத்தின் கௌரவ தலைவராக இருந்தார்.
ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. “பிஷப் நீங்கள சொல்லுறதச் சொல்லுங்கோ. ஆனால்,நாங்கள்தான் தீர்மானிப்பம் “என்ற தொனிப்பட சம்பந்தர் பதில் சொன்னார். அதன்பின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குடிமக்கள் சமூகம் ஒன்றின் தலைவராகிய சிவகரன் பல்வேறு நிகழ்ச்சிகளையும் சந்திப்புகளையும் ஒழுங்கு செய்துவந்தார்.கடந்த 14 ஆண்டுகளில் ஒற்றுமை முயற்சிகளை அதிகமாக முன்னெடுத்தது அவர்தான்.
சிவகரனின் ஏற்பாட்டில் முதலாவது முயற்சி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் வளாகத்தில் இடம்பெற்ற அச்சந்திப்பில் கஜேந்திர குமார்,கஜேந்திரன்,ஆனந்தி போன்றவர்களும் வந்திருந்தார்கள்.அச்சந்திப்பைத் தொடர்ந்து மேலும் சில சந்திப்புகள் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் ஒழுங்கு செய்யப்பட்டன.ஒரு யாப்பை வரைவதுவரை அம்முயற்சிகள் முன்னேறின. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அது தோல்வியடைந்தது.அதற்கு பிரதான காரணம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான்.
எனினும் சிவகரன் ஓயவில்லை.பிறகோர் முயற்சி ஆனந்தசங்கரியின் கட்சிச் சின்னத்தை,அதாவது உதயசூரியன் சின்னத்தை வைத்துக்கொண்டு ஏதாவது செய்யலாமா என்று முயற்சிக்கப்பட்டது. ஆனந்தசங்கரியும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒத்துக் கொண்டார்.ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒத்துழைக்கவில்லை.அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.
அதன்பின் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தினார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதில் பங்கு பற்றியது. 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஓர் ஆவணம் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த ஐக்கியம் கருவிலேயே கருகிவிட்டது.
ஆனால் சிவகரன் சோரவில்லை.மீண்டும் ஒரு முயற்சியைத் தொடங்கினார். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஜெனிவாவுக்கு ஒரு செய்தியைக் கூற வேண்டும் என்பது அந்த முயற்சிகளின் நோக்கம்.முதல் சந்திப்பு கிளிநொச்சியில்.அதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்குபற்றவில்லை. ஆனால் சந்திப்பில் பங்குபற்றிய குடிமக்கள் பிரதிநிதிகள் இருவர் அடுத்த சந்திப்புக்கு தமிழ்த் தேசிய முன்னணி மக்கள் முன்னணியை அழைத்துக் கொண்டு வந்தார்கள். இதுபோன்ற ஐக்கிய முயற்சிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அழைத்துக் கொண்டு வரத்தக்க தொடர்புகள் தமிழ் சிவில் சமூக அமையும் என்ற குடிமக்கள் சமூகத்துக்கு மட்டும்தான் இருந்தன.
அந்த ஐக்கிய முயற்சி அடுத்தடுத்த கட்டத்துக்கு வெற்றிகரமாக முன்னேறியது. முடிவாக கிளிநொச்சியில் நடந்த இறுதிக் கூட்டத்தில் ஐநாவுக்கு ஒரு கூட்டுக் கடிதம் எழுதுவது என்று முடிவெடுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாசம் 21 ஆம் திகிதி ஒரு கடிதம் எழுதப்பட்டது.கடந்த 14 ஆண்டு கால தமிழ் அரசியலில் வெற்றிகரமாக மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைத்த ஒரு முயற்சியாக அதைக் குறிப்பிடலாம்.ஆனால் அதுவும் பின்னர் தோல்வியடைந்தது.அந்த ஒருங்கிணைப்பு கடிதத்தோடு முடிந்து விட்டது. கடிதம் எழுதிய கட்சிகள் அதன் பின் ஒன்று மற்றதுடன் மோதத் தொடங்கின.சமாதானம் செய்த சிவில் சமூக பிரதிநிதிகளையும் விமர்சித்தன.அந்த முயற்சிக்குப் பின் எந்த ஒரு சிவில் சமூகமும் அது போன்ற ஐக்கியப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடத் தயாராக இருக்கவில்லை.
மேற்படி ஐக்கிய முயற்சிகளில் அதிகமாக உழைத்த சிவகரனும் பின்னர் சோர்ந்து விட்டார்.பல்கலைக்கழக மாணவர்களும் இப்பொழுது எல்லாக் கட்சிகளையும் அழைத்து ஐக்கியப்படுத்தும் பலத்தோடு இல்லை. தமிழ் சிவில் சமூக அமையமும் பெருமளவுக்குக் களைத்து விட்டதாகத் தெரிகிறது.
இப்படிப்பட்டதோரர் தோல்விகரமான அனுபவப் பின்னணியில்,மீண்டும் ஒரு ஐக்கிய முயற்சியை டாண் டிவி குழுமம் தொடங்கியிருக்கிறது.ஒரு பலமான உள்ளூர் ஊடகம் என்ற அடிப்படையில்,அரசியல்வாதிகள் டாண் டிவி குழுமத்தோடு நல்லுறவைப் பேண விரும்புவார்கள்.அந்தத் தங்குநிலையின் அடிப்படையில்தான் டாண் டிவி அப்படி ஒரு நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருக்கலாம்.எனினும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தொகுதி அரசியல்வாதிகள் வரவில்லை. சமயத் தலைவர்களும் வரவில்லை.
அந்த ஐக்கிய முயற்சிக்குள் கஜேந்திரகுமார் வரமாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.விக்னேஸ்வரனையும் காணவில்லை.குத்துவிளக்கு கூட்டணிக்குள் காணப்படும் சில தலைவர்களையும் காணவில்லை.ஆயின்,அந்த ஒருங்கிணைப்பு முயற்சியில் டாண் டிவி குழுமம் முழு வெற்றி பெறுமா?
கடந்த 14 ஆண்டுகளில் தமிழ்த் தேசியப்பரப்பு சிதறிக் கொண்டு போகிறது. மெலிந்து கொண்டு போகிறது.வடக்கு கிழக்கு இணைப்பு பெருமளவுக்கு பலவீனம் அடைந்து விட்டது.கிழக்கில் கிழக்கு மையக் கட்சி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கொண்டிருக்கின்றது.அதாவது தாயகம் மனரீதியாக உடைக்கப்படுகின்றது. இரண்டாவது,கடந்த 14 ஆண்டுகளில் ஏற்கனவே இருந்த பெரிய கூட்டு உடைந்து,சிதறி,சிறிய சிறிய கூட்டுக்களே உருவாகியுள்ளன. அவையும் பலமான இறுகிப் பிணைந்த கூட்டுக்கள் அல்ல.
மிகப்பெரிய கூட்டாக இருந்த கூட்டமைப்பிலிருந்து முதலில் கஜன் அணி வெளியேறியது.பின்னர் ஆனந்தி,சிவகரன் போன்றோர் வெளியேறினர்.பின்னர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியேறினார்.பின்னர் இடையில் வந்த விக்னேஸ்வரன் இடையிலேயே வெளியேறினார்.முடிவில் புளட்டும் டெலோவும் வெளியேறின.இப்பொழுது தமிழரசுக் கட்சிக்குள்ளும் அடுத்த தலைவர் யார் என்ற போட்டி.
மூத்த பழைய கட்சியாகிய தமிழரசுக் கட்சி தன் தலைவரை இதுவரையிலும் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யவில்லை.அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.ஆனால் அப்படிப்பட்ட ஒரு தலைவர் இல்லாத வெற்றிடத்தில் இப்பொழுது தலைவருக்காக ஒரு தேர்தலை வைக்க வேண்டிய நிலைமை தோன்றியிருக்கிறது.அந்த தேர்தல் அக்கட்சியை மேலும் பலவீனப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது கடந்த 14 ஆண்டுகளில் ஐக்கியம் சிதறிக் கொண்டே போகிறது. கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கட்சிகள் குத்துவிளக்குச் சின்னத்தின் கீழ் ஒரு கூட்டை உருவாக்கின.ஆனால் அதுவும் பலமானதாகத் தெரியவில்லை. அவர்கள் தங்களுடைய பலத்தை அடுத்த தேர்தலில் தான் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இவ்வாறு கட்சிகள் ஒருபுறம் சிதறுகின்றன.கட்சிகளில் நம்பிக்கை இழந்த, அல்லது தமிழ் அரசியலில் நம்பிக்கை இழந்த ஒரு தலைமுறை இலகுவாக அரசியல் நீக்கம் செய்யப்படுகிறது. “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று பாடியது ஒரு காலம்.கனடாவுக்கும் லண்டனுக்கும் எப்படிப் போகலாம் என்று தேடித்திரிவது இன்றைய யதார்த்தம்.பெருமளவுக்கு இளையோர் வெளியேறுகிறார்கள். வ்வாறு வெளியேறினால் எதிர்காலத்தில் தாயகத்தில் சனத்தொகை மெலிந்துவிடும்.அதாவது வாக்காளர் தொகை குறைந்துவிடும். தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
இதுதான் இப்போதுள்ள நிலைமை.ஒருபுறம் வடக்கு கிழக்கு இணைப்பு,அதாவது தாயகக் கோட்பாடு அதிகம் சோதனைக்கு உள்ளாகிறது.இன்னொருபுறம் கட்சிகள் சிதறுகின்றன.மூன்றாவதாக,மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்.அதேசமயம் அரசாங்கம் நிலத்தைப் பறிக்கும் நடவடிக்கைகளையும் சிங்கள பௌத்த மயமாக்கலையும் முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் ஒற்றுமைப்படா விட்டால் தமிழ்மக்களுக்கு மீட்சியே இல்லை என்ற ஒரு பயங்கரமான நிலைமை தோன்றியிருக்கிறது.
இப்படிப்பட்டதோர் பாரதூரமான பின்னணியில்,கட்சிகளையும் தனிப்பட்ட வாக்காளர் தொகுதிகளையும் கட்டியெழுப்ப முயற்சிக்கும் அரசியல்வாதிகள், தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற அடிப்படையில் சிந்திப்பார்களா? தேசத்தை கட்டியெழுப்புவதற்கான ஓர் ஐக்கியத்தை கட்டியெழுப்புவார்களா?டாண் டிவியின் இந்த முயற்சி வெற்றியளிக்குமா?
சூரன் போரிலன்று நடந்த ஒரு நிகழ்ச்சி அது.சூரனை இந்துக்கள் அகம்பாவத்தின் குறியீடாக காண்பார்கள்.ஈகோவின் குறியீடு. சூரன் போரிலன்று தந்தை செல்வா கலையரங்கில் கூடிய தலைவர்கள்-ஈகோவை-தன்முனைப்பைக் கைவிட்டு ஒற்றுமைப்படுவார்களா? பரந்துபட்டஅளவில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஓர் ஐக்கியத்தை கட்டியெழுப்புவார்களா?