அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் மனைவி ரோஸலின் கார்ட்டர் (Rosalynn Carter) காலமானார்.
உடல்நலப் பாதிப்புக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ரோஸலின் கார்ட்டர் தனது 96 ஆவது வயதில் நேற்றுக்(19) காலமானார்.
இந்நிலையில் அவரது மறைவுக்குப் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜிம்மி கார்ட்டர் ”தனது திருமண வாழ்க்கையில் அனைத்திலும் ரோஸலின் சமபங்கு கொண்டிருந்தார். முக்கியமான கட்டங்களில் தனக்கு நல்ல வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் வழங்கினார்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி கார்ட்டர் இருந்தபோது அவரது அரசியல் வாழ்வில் ரோஸலின் மிகப்பெரும் பங்காற்றியிருந்தார். குறிப்பாக அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கெடுத்துக்கொள்ளும் அளவுக்கு அதிகாரமிக்கவராகவும் அவர் திகழ்ந்தார்.
அதுமட்டுமல்லாது ‘கார்ட்டர் மையம்‘ என்ற அமைப்பை ஆரம்பித்து உலக அமைதி மற்றும் மனநலம் தொடர்பான செயற்பாடுகளிலும் ரோஸலின் கார்ட்டர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.