வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துளன்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யாழ்,வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழர் பகுதிகளில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறும் போது அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இதனால் குறுகிய காலகட்டத்திலேயே குறித்த சம்பவங்கள் மறந்து விடுகின்றன.
எனவே குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகளால் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மாத்திரமே இந்நிலையினை சரிசெய்ய முடியும்.
இது ஒரு மிகப் பாரதூரமான விடயம் என்பதைக் கருத்திற்கொண்டு அரசாங்கம், முக்கியமாக பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்ளுகின்றேன்” இவ்வாறு தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.