நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால இலக்குகளைக் கொண்ட வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியம் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பணவீக்கத்தை எம்மால் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. 70 வீதமாக இருந்த பணவீக்கம் -2.5 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்பேது, இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
இதன் உடாக நாம் சரியான பாதையில் பயணிக்கின்றோம் என்பது புரிகின்றது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, பொருட்களின் விலைகள் பாரிய அளவில் குறையாவிட்டாலும் அதன் அதிகரிப்பு வேகத்தை நாம் கட்டுப்படுத்தியுள்ளோம்.
எம்மால் அரசியல் ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும். அதன் பலன்களை மக்களே எதிர்கொள்ள நேரிடும்.
எவ்வாறாயினும் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள புதிய முதலீடுகள் அவசியமாகும்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இந்நாட்டை புதிய பொருளாதார கட்டமைப்புக்குள் இட்டுச் செல்லும்.
அதேபோல் டிஜிட்டல் மயமாக்கலுக்காக இம்முறையும் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இம்முறை வரவு – செலவு திட்டத்தில் 70 சதவீதமான தொகை கடன் வட்டியை செலுத்துவதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
வரி அறவீட்டுத் தொகையையும் அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளது.
வரிக் கட்டாமல் நழுவிச் செல்வோரை வரி செலுத்தும் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம் என்பதோடு, அதற்கு அவசியமான வேலைத்திட்டத்தினை இவ்வருடம் முதல் ஆரம்பிக்கவுள்ளோம்.
எவ்வாறாயினும் நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வுகள் இல்லை என்பதால் நீண்ட கால இலக்குகளுடன் கூடிய வேலைத்திட்டங்களே அவசியமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.