மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் செய்யவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. எனினும் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள், கொடிகள், மற்றும் படங்கள் பயன்படுத்த கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்றைய தினம் மாவீரர் நினைவேந்தல் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி வாழைச்சேனை, வவுணதீவு, சந்திவெளி, கொக்கட்டிச்சோலை, வாகரை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொலிஸாரால் மட்டக்களப்பு,வாழைச்சேனை, நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த தடை உத்தரவுக்கு எதிராக இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி நா.உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், கட்சி தேசிய அமைப்பாள் த.சுரேஸ், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின்களான ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன் உட்படவர்கள் சிரேஷ்ட சட்டத்தரணி பிறேம்நாத், விஜயகுமார் உட்பட 7 சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றில் முன்நகர்வு பத்திரம் விண்ணப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் ”இறந்தவர்களுக்கு நினைவேந்தல் செய்ய உரிமையுண்டு எனவும் குறித்த மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்கள் சுயமாக நினைவேந்தலை அனுஸ்டிக்க முடியும் எனவும் அதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் சின்னங்கள்,கொடிகள், புகைப்படங்கள் பயன்படுத்தகூடாது” எனவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்