“அதிகளவான சுற்றுலாப் பயணிகளை மாலைதீவுக்கு அனுப்புமாறு” சீனாவிடம் மாலைதீவின் ஜனாதிபதி மொஹமட் முய்ஸ்சு (Mohamed Muizzu) கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் லட்சத்தீவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு மாலைதீவின் அமைச்சர்கள் சிலர் அநாகரிகமாக விமர்சித்திருந்தனர்.
குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தியர்கள் பலரும் மாலைத்தீவுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணித்து வருகின்றனர்.
மேலும், லட்சத்தீவில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையில் பலரும் லட்சத்தீவை நோக்கிப் படையெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மாலைதீவின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், 5 நாட்கள் உத்தியோக பூர்வ விஜயமாக சீனா சென்றுள்ள மாலைதீவின் ஜனாதிபதி, பிஜின் மாகாணத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதன்போது ”சீனா எங்களின் மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்று. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் எங்கள் சுற்றுலா துறையின் முதன்மை சந்தையாக சீனா உள்ளது. மாலைதீவுக்கு சுற்றுலா வரும் பயணிகளில் முதல் இடத்தில் சீனா உள்ளது.
இதே நிலை தொடர சீனா எங்கள் நாட்டிற்கு மேலும் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்ப வேண்டும்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.