கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் கராப்பிட்டி கிளை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 16ஆம் திகதி விசேட வைத்திய நிபுணர் டொக்டர் கிரிஷாந்த பெரேராவினால் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை அன்றைய தினம் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் தடைப்பட்டதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் நிபுணர் கலாநிதி கிரிஷாந்த பெரேரா உரிய திணைக்களங்களுக்கு அறிவித்திருந்ததாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக கடந்த 17ஆம் திகதி சுகாதார பணியாளர்கள் குழுவொன்று டொக்டர் கிரிஷாந்த பெரேராவை அச்சுறுத்தியதுடன், அந்த குழுவினர் தொடர்ச்சியாக உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறைகளிடம் கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.