பால்மாவுக்கான வரி அதிகரிப்பை மேற்கொண்டதன் மூலம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் புத்திக பத்திரன எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
பால்மாவுக்கான வரி அதிகரிப்பை மேற்கொண்டதன் மூலம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்துள்ளதுடன் தேசிய பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பால்மா இறக்குமதியைக் குறைக்கும் வகையிலேயே அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
பால்மா, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட 20 அத்தியாவசியப் பொருட்கள் குறித்து எதிர்வரும் வாரம் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளோம்.
நாட்டிற்கு பால்மா இறக்குமதி செய்யும் போது சுகாதார அமைச்சு மற்றும் தர நிர்ணய சபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன” என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.