ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில்,இன்று அவர்கள் தமது பதவிகளை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோருக்கு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயரை புதிய கூட்டணி அமைக்கும் போது பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் கூட்டணியின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்றுள்ள மஹிந்த அமரவீரவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதன் பின்னர் வெற்றிடமாக இருந்த பொதுச்செயலாளர் பதவிக்கு திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டார்.
இந்தத் தீர்மானத்திற்கு எதிராக அமைச்சர் மகிந்த அமரவீர சட்ட நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய அவர்களை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயரை புதிய கூட்டணிக்கு பயன்படுத்தினால் இருவரும் வெளியேறி புதிய செயலாளர் நாயகத்தை நியமிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.