புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு கடன்வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அனுமதி பெற்ற வங்கிகளின் ஒத்துழைப்புடன் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உயர்ந்தபட்சம் 10 மில்லியன் ரூபாய் வரையான கடன் வசதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான வட்டிச் செலவின் ஒருபகுதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் ஈடு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
உத்தேச கடன் திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளும் கடன்தொகை, கடன் பெறுநரால் புலம்பெயர் தொழிலொன்றில் ஈடுபடுகின்ற காலப்பகுதியில் சட்ட ரீதியான வழிமுறைகளில் அனுப்பப்படுகின்ற வெளிநாட்டு நாணயத்தில் செலுத்தப்பட வேண்டும்.
புலம்பெயர் தொழிலை முடிவுறுத்தி நாடு திரும்பிய பின்னர் இலங்கை ரூபாய்களில் செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதற்கமைய, உத்தேச வீடமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” என அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.