நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைவதற்கு மத்திய வங்கியே பிரதான காரணம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் அளுநராக இருந்த காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணியில் பாரிய மோசடி இடம்பெற்றது.
அதனால் வெளிநாட்டுகளில் இருப்பவர்களுக்கு மத்திய வங்கியின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாமல் போயிருந்தது.
அரச வங்கிகள் சாதாரண மக்கள் தொடர்பில் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் அந்த மக்கள் கறுப்பு வியாபாரிகளை நாடி, தங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு பாரிய வட்டித் தொகைக்கு கடன் பெறுகின்றனர்.
இதனால் சாதாரண வியாபாரிகள் விவசாயிகளின் தொழிலில் நட்டம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் அந்த தொழிலை விட்டுவிடும் நிலைக்கு செல்கிறனர்.
அதனால்தான் இன்று நாட்டில் விவசாயம் செய்பவர்களின் வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
எனவே இது தொடர்பாக மத்திய வங்கி கொள்கை ரீதியில் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டு அதனை சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் அது தொடர்பான சட்டங்களை அனுமதித்துக்கொள்ள எம்மால் முடியும். மத்திய வங்கிக்கு நிதி தொடர்பான அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
அதனால் இன்னும் தாமதிக்காமல் மத்திய வங்கி இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் நாடு வீழ்ச்சியடைய பிரதான காரணம் மத்திய வங்கியாகும்.
இதற்கு 90 வீதம் மத்திய வங்கியின் நடவடிக்கையே காரணமாகும்” என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.














