குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) திறந்த நீதிமன்றத்தில் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள தமக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி இன்று நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் திரு.சஷி மகேந்திரன் ஆகியோர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்
அந்தவகையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய, நீதிமன்றில் முன்னிலையாகி, இங்குள்ள முன்னேற்றங்களை அறிவிப்பதற்கு திகதி வழங்குமாறு கோரினார்.
அதன்படி, இந்த உத்தரவின் முன்னேற்றத்தை தெரிவிக்கும் வகையில் மனுவை இம்மாதம் 27ஆம் திகதிக்கு அழைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.