சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 7ஆம் திகதி விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின்
இரண்டாவது மீளாய்வுக்காக நாட்டுக்கு வருகைத் தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுமார் 2 வாரங்களில் இரண்டாவது மதிப்பாய்வை முன்னெடுக்கவுள்ளனர். கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் நிறைவு செய்யப்பட்டுள்ள ஏனைய வாக்குறுதிகள் தொடர்பாக இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளது.
இரண்டாவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை இணக்கப்பாடு கிடைக்கப்பெற வேண்டும். அதன்பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணையை பெற்றுக்கொள்ள முடியும்” இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.