சாந்தனின் உயிர் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தனுடன் விடுவிக்கப்பட்டு இலங்கை திரும்ப முடியாமல், சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வு தொடர்பாக வழங்கிய ஒலிப்பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சாந்தனுடன் 33 வருடங்கள் நான் சிறையில் கழித்துள்ளேன். சாந்தன் தனது தாய் மண்ணில் கால் வைப்பதற்கு முன்னரே அவரது உயிர் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளது. இதுவே எனக்கும் ராபர்ட் பயஸ்ஸுக்கும்,ஜெயகுமாருக்கும் நடக்கப் போகின்றது.
33 வருடங்களாக சிறையில் மனதையும் , உடலையும் திடமாக வைத்திருந்த ஒருத்தர், சிறப்பு முகாமில் ஒரு வருடத்திற்கு எவ்வாறு இப்படி மாறி போனார். இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. மக்களின் அஞ்சலி ஊடாக வெளி உலகுக்கு எமக்கு இழைக்கப்பட்ட அநீதி தெரிய வர வேண்டும்” இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார்.