பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் தேசபந்து தென்னகோனை, அரசியலமைப்பு பேரவையின் உரிய பரிந்துரையின்றி, பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மனுக்களை கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் இணைந்து தாக்கல் செய்துள்ளது.
இதில் சபாநாயகர், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதன்படி தேசபந்து தென்னகோனை தற்காலிக பதில் பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை முறையான அனுமதியைப் பெறவில்லை என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பை வழங்குமாறும், தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.
மேலும் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்ததை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பாதுக்க மற்றும் பேராசிரியர் சாவித்திரி குணசேகர ஆகியோரும் மேலும் இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.