கச்சத்தீவு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. அரசு செய்த பாவத்தால்தான் தமிழக மீனவர்கள் இலங்கை அரசினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக இந்தியப் பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், மோடியின் இக் கருத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,
‘தி.மு.க. அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.
அத்துடன் கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்த பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய் திறக்காதது ஏன்?
படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரபூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்? என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.