நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளோம். 16,000 மில்லியன் செலவில் 162 பாலங்கள் நிர்மாணிக்கப்படும் என்று கூறினோம்.
அந்தப் பாலங்களில் ஒரு பகுதியை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்.
இதன்படி 162 பாலங்களும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் மக்களிடம் கையளிக்கப்படும். சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா திட்டமும் ஓகஸ்ட் மாத இறுதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
மேலும், 29,000 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்.
இன்னும் 2600 உத்தியோகத்தர்கள் எஞ்சியுள்ளனர். அவர்களை வெற்றிடமாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும் அனைத்து அமைச்சுக்களின் கீழும் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம்.
நாடு நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது. இது அனைத்து துறைகளிலும் எடுத்துக் காட்டப்படுகிறது.
நாட்டை மீண்டும் கடந்த காலங்களில் இருந்த நிலைக்கு பின்னோக்கிக் கொண்டு செல்ல சிலர் முயற்சிக்கின்றனர். இப்படி இடையூறு செய்பவர்களுக்கு எதிராக தரா தரம் பாராமல் சட்டத்தை செயல்படுத்துவோம்” இவ்வாறு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.